search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய சென்னை"

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு தம்பிதுரை மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை ஆகியோர் விருப்ப மனு அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் கடந்த 4-ந்தேதி முதல் தலைமை கழகத்தில் பெறப்பட்டு வந்தது. இதில் 10-ந்தேதி வரை 1200-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

    மனு தாக்கல் செய்வதற்கு அதிகம் பேர் முன்வந்ததால் விருப்ப மனுபெறும் தேதி 14-ந் தேதி வரை நீடிக்கப்பட்டிருந்தது.

    இதையொட்டி ஏராளமான கட்சி நிர்வாகிகள் நேற்று மாலை 5 மணி வரை மனுக்களை பெற்றுபூர்த்தி செய்து தலைமை கழகத்தில் வழங்கினார்கள். மொத்தம் 1,737 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

    தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் மத்திய சென்னை தொகுதியில் விருப்ப மனு கொடுத்துள்ளார்.

    இவர் மத்திய சென்னைக்கு உட்பட்ட அண்ணாநகரில் வசித்து வருவதால் இந்த தொகுதியில் போட்டியிட விரும்புவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி கரூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார்.
    இதேபோல் தம்பிதுரையும் கரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார்.

    கரூர் தொகுதியில் இப்போது எம்.பி.யாக இருப்பவர் தம்பிதுரை. பாராளுமன்ற துணை சபாநாயகரான இவர் பிரதமர் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். பா.ஜனதா கட்சியையும் கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.

    எனவே அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி ஏற்பட்டால் தம்பிதுரைக்கு கரூர் தொகுதி மீண்டும் கிடைக்காது என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

    அதனால்தான் அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி கரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ராஜேந்திரநாத் குமார் தேனி தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் தென்சென்னை தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளார்.

    மைத்ரேயன் எம்.பி. தென்சென்னை, மத்திய சென்னைக்கும், டி.ஜி.வெங்கடேஷ்பாபு வட சென்னையிலும் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க. சார்பில் 4500-க்கும் மேற்பட்டவர்கள் விருப்பமனு வாங்கி இருந்தனர். இதில் பலர் ஜெயலலிதா பெயரில் விண்ணப்பம் செய்திருந்தனர்.

    அவர் மறைந்த பிறகு நடைபெறும் முதல் பாராளுமன்ற தேர்தலுக்கான விருப்பமனுவை 1,737 பேர் மட்டுமே வாங்கி உள்ளனர். இது ஜெயலலிதா இருந்தபோது வாங்கிய விண்ணப்பங்களை விட 3 மடங்கு குறைவாகும். #ADMK
    ×